குப்பைகளை சேகரிக்கும் தொழிலாளியாக சீனாவில் கடமையாற்றும் 64 வயது மூதாட்டி ஒருவர் வறிய குடும்பங்களைச் சேர்ந்த 15 இற்கும் அதிகமான மாணவர்களின் உயர் கல்விக்கு தேவையான நிதியை கடந்த 12 வருடங்களாக வழங்கி வருகின்றார்.
இவரின் பெயர் Li Yukun. 50 வயதில் இவர் ஓய்வு பெற்று இருக்க வேண்டும். ஆனால் அதிகாரிகளிடம் கெஞ்சிக் கூத்தாடி இவ்வேலையை தக்க வைத்துக் கொண்டு இருக்கின்றார். காரணம் இவ்வேலை மூலம் கிடைக்கின்ற சம்பளத்திலேயே மாணவர்களுக்கு தேவையான நிதியை தவறாமல் கொடுத்து வருகின்றார்.
இதை விட இயற்கை அழிவுகளால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்காகவும், நலிந்தவர்களுக்காகவும் ஒட்டுமொத்தமாக 100,000 யுவான் வரை செலவு செய்து உள்ளார்.
ஆனால் சுய அடையாளங்களை வெளிப்படுத்தாமலேயே உதவிகளை மேற்கொண்டு வருகின்றார்.
இவரிடம் கடந்த நான்கு வருடங்களாக நிதி பெற்று வரும் பல்கலைக்கழக மாணவிகளில் ஒருவர் Kang Yujing.
இம்மாணவிக்கு வருடாந்தம் 1000 யுவான் அனுப்பி வருகின்றார்.
Li என்கிற கோடீஸ்வர அங்கிள்தான் இப்பெருந்தொகை நிதியை அனுப்பி வருகின்றார் என்று மாணவி எப்போதும் நம்பி வந்து இருக்கின்றார்.
ஆயினும் ஒருவாறு மோப்பம் பிடித்து மூதாட்டியின் அடையாளத்தை தெரிந்து கொண்டார்.
மூதாட்டியை நேரில் கண்டு நன்றி கூற வந்து இருந்தார்.
சீன வீதி ஒன்றில் குப்பை சேகரித்துக் கொண்டிருந்த மூதாட்டியை கண்டு கொண்டார். அப்படியே கட்டி அணைத்தார். அழுதார். ஆசிர்வாதம் பெற்றார்.
குப்பை சேகரிக்கும் வேலை இலேசுப்பட்டது அல்ல. கடினமானதுதான்.
இரும்புப் பெண் என்றுதான் மூதாட்டி Li சகபாடிகளால் அழைக்கப்படுகின்றார்.
இவர் மிகவும் எளிமையாக வாழ்பவர். சாதாரண வீடு ஒன்றில் வசிக்கின்றார்.
உடல் அவயங்களை மரணத்தின் பின்னர் தானம் செய்ய தீர்மானித்து உள்ளார்.
No comments:
Post a Comment